புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. தகுதியான வாக்காளர்களை நீக்கி உள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடுத்துள்ளன.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதன்மூலம், போலி வாக்காளர்கள் களையப்படுவார்கள், வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக மாறும் என்று தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்பாகவும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், “வாக்காளர் பட்டியலை சுருக்கமாக திருத்துவது அல்லது தீவிர திருத்தத்தை மேற்கொள்வது என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உட்பட்டது. இதில், உச்ச நீதிமன்றம் உட்பட எந்த ஒரு அமைப்பும் தலையிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் தேர்தல் பதிவு விதிகள் 1960 ஆகியவற்றின் படி, இவ்விவகாரத்தில் முழு அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என வரையறுக்கப்படவில்லை. எந்த ஒரு தொகுதியின் அல்லது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலையும் பொருத்தமான காலத்தில் திருத்தம் செய்ய சட்டம் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும். வாக்காளர் பட்டியலின் தூய்மை மற்றும் ஒருமைப்பாட்டை பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமையை தேர்தல் ஆணையம் முழுமையாக அறிந்திருக்கிறது.
ஜனவரி 1, 2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அனைத்துத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் ஜூலை 5ம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்த பணியை மேலும் வலுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை கூட்டியுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.