மும்பை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “நாளை திட்டமிடப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிப்பது பயங்கரவாதம் குறித்த நமது நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
நமது பிரதமர், இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று சொன்னார், எனவே இரத்தமும், கிரிக்கெட்டும் எவ்வாறு ஒன்றாகப் பாய முடியும்?. போரும் கிரிக்கெட்டும் ஒரே நேரத்தில் எப்படி இருக்க முடியும்?. அவர்கள் தேசபக்தியில் வியாபாரம் செய்துள்ளனர்.
தேசபக்தியை பணத்திற்காக பயன்படுத்துகிறார்கள். அந்தப் போட்டியில் இருந்து கிடைக்கும் பணத்தையும் அவர்கள் விரும்புவதால் அவர்கள் நாளை போட்டியை விளையாடப் போகிறார்கள். இதனால் நாளை, மகாராஷ்டிராவில் சிவசேனா (யுபிடி) பெண் தொண்டர்கள் தெருக்களில் இறங்கி பிரதமர் மோடிக்கு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குங்குமம் (சிந்தூர்) அனுப்பப் போகிறார்கள்.” என்று அவர் அறிவித்தார்.