ஹைதராபாத்: தேசிய அளவில் ‘வாக்கு திருட்டு’ க்கு எதிராக பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறது காங்கிரஸ் கட்சி. இந்த ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான நடைமுறைக்காக ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். இது அவர் தொடர்ந்து பேசி வரும் வாக்கு திருட்டு என்ற குற்றச்சாட்டை விட மோசமான குற்றம் ஆகும்.
பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறிய போதிலும், தாங்கள் காங்கிரஸில் சேர்ந்ததை இப்போதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த அவமானகரமான செயலில் காங்கிரஸ் கட்சியின் பங்கு அதன் இரட்டை நிலைப்பாட்டை நிரூபிக்கிறது. இதுகுறித்து ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்.
ராகுல் காந்தி டெல்லியில் அந்த எம்எல்ஏக்களை சந்தித்து காங்கிரஸ் துண்டு போர்த்திவிட்டார், ஆனால் அவர்கள் கட்சியில் சேரவில்லை. இது எம்எல்ஏ திருட்டு இல்லையென்றால், வேறு என்ன?. இதுபோன்ற அரசியல் பாசாங்குத்தனத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா?
இத்தகைய கட்சித் தாவல்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகின்றன மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கின்றன. காங்கிரஸ் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட இதுபோன்ற விஷயங்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறது.” என்று அவர் கூறினார்.
119 எம்எல்ஏக்களை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 75 ஆக உள்ளது. எதிர்க்கட்சியான பிஆர்எஸ்-க்கு 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் இதுவரை 10 எம்எல்ஏக்கள் படிப்படியாக காங்கிரஸில் இணைந்துள்ளனர். கட்சித்தாவல் நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் இதுவரை வெளிப்படையாக காங்கிரஸ் உறுப்பினராகவில்லை.