லெக் ஸ்பின் பவுலிங்கை ஒரு கலையாக மாற்றிய ஆஸ்திரேலிய அதியற்புத ஸ்பின்னர் ஷேன் வார்ன் 1969-ம் ஆண்டு இன்றைய தினம் தான் பிறந்தார். விக்டோரியாதான் இவர் பிறந்த மாகாணம்.
தான் ஆடிய காலத்தில் நேர்மறை விஷயங்களுக்காகவும் பெண்கள் உள்ளிட்ட எதிர்மறை விஷயங்களுக்காகவும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றவர். ஒரு கட்டத்தில் 2000-ம் ஆண்டில் 20-ம் நூற்றாண்டின் 5 கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஷேன் வார்னும் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றார்.
உலகில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லெக் ஸ்பின்னர், அதாவது 708 விக்கெட்டுகளை 145 டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். முதன்முதலில் 700 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டிய பவுலர் ஷேன் வார்ன்தான். 37 முறை 5 விக்கெட்டுகள், ஒரே டெஸ்ட்டில் 10 முறை 10 விக்கெட்டுகள். சிறந்த பந்து வீச்சு 71 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள். 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகள். 12 முறை 4 விக்கெட்டுகள். பேட்டிங்கிலும் மிக மிக முக்கியமான, நெருக்கடியான கட்டங்களில் பங்களிப்பு செய்து 145 டெஸ்ட் போட்டிகளில் 3,154 ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் சதத்தைத் தடுத்த நடுவர் அலட்சியம்: 2001-02 நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்த போது 99 ரன்களில் அவர் மார்க் ரிச்சர்ட்ஸனிடம் டீப்பில் கேட்ச் ஆகி டேனியல் வெட்டோரியிடம் ஆட்டமிழந்தார். ஆனால் ரீப்ளேயில் அது நோ-பால் என்று பிற்பாடு தெரியவந்தது. நடுவர் ஒழுங்காகப் பார்த்திருந்தால் ஷேன் வார்ன் என்னும் லெஜண்ட் பெயரில் ஒரு சதமும் பதிவாகி இருக்கும். முதல் தரப் போட்டிகளில் 301 ஆட்டங்களில் 1319 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 473 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 70 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவரிடம் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் தலைமைத்துவப் பண்புகள் இருந்தாலும் இவர் ஒரு ஃப்ரீக் என்பதால் இவரிடம் கேப்டன்சி கொடுக்கப்படவில்லை. இதோடு ஊக்கமருந்து எடுத்துக் கொண்டு ஒரு உலகக் கோப்பையே ஆட முடியாமல் போயுள்ளார்.
ஸ்லெட்ஜிங்கில் பிரபல சம்பவம்: 1999-2000 தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்ற போது மெல்போர்ன் டெஸ்ட்டில் 85000 பேர் போட்டியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அப்போது சச்சின் டெண்டுல்கர் கிரீசில் இருக்கிறார். எதிர்முனையில் அப்போதுதான் கங்குலி இறங்கினார். அவர் ஷேன் வார்னை நன்றாகவே ஆடினார். சச்சின் டெண்டுல்கரை எதிர்கொள்ள விடாமல் தானே ஷேன் வார்னை ஆடிக்கொண்டிருந்தார். அப்போது ஷேன் வார்ன், கங்குலியை நோக்கி, “உன் லொட்டு வைக்கும் ஆட்டத்தைப் பார்க்க இத்தனை ரசிகர்கள் இங்கு கூடவில்லை, எதிர்முனையில் நிற்கிறானே சச்சின் அவன் ஆட்டத்தைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள்” என்று துடுக்காகச் சொல்ல கங்குலி அடுத்த ஓவரில் ஷேன் வார்னை இறங்கி வந்து ஆட முயன்று ஆட்டமிழந்தார். அதே போல் தென் ஆப்பிரிக்காவின் அப்போதைய வளரும் நட்சத்திரம் டேரில் கலினனை ஸ்லெட்ஜிங் செய்து, அவர் கரியரையே காலி செய்து விட்டார்.
அந்த ‘பால் ஆஃப் த செஞ்சுரி’ பெருமை: 1992-ல் இந்தியாவுக்கு எதிராகத்தான் வார்ன் அறிமுகமானார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை, சச்சின் சதம் எடுக்க, ரவி சாஸ்திரி 206 ரன்கள் என்று இரட்டை விளாசினார். அதன் பிறகு பெரிய அளவில் பந்துகளைத் திருப்பினார் ஷேன் வார்ன். அப்படித்தான் 1993ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மைக் கேட்டிங்கிற்கு வீசிய அந்த பிரசித்தியான பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே கிட்டத்தட்ட பிட்சின் வலது ஓரத்தில் பிட்ச் ஆகி குடை போல் திரும்பி ஸ்டம்பைத் தாக்கியது, கேட்டிங் சற்றும் எதிர்பாராமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார், அதற்குப்பிறகும் அவருக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. அந்தப் பந்துதான் பிற்பாடு ‘Ball of The Century” என்று புகழ்பெற்றது.
1993 ஆஷஸ் தொடரில் 34 விக்கெட்டுகள். 1994-95 ஆஷஸ் தொடரில் 27 விக்கெட்டுகள். 1997 ஆஷஸ் தொடரில் 24 விக்கெட்டுகள், 2001 ஆஷஸ் தொடரில் 31 விக்கெட்டுகள். 2005 ஆஷஸ் என்ற புகழ்பெற்ற தொடரில் ஷேன் வார்ன் ஆஸ்திரேலியாவை தொடர் வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியவில்லை என்றாலும் 40 விக்கெட்டுகளைச் சாய்த்து அசத்தினார். 2003-04ல் இலங்கையில் ஆஸ்திரேலியா 3-0 என்று வெற்றி பெற்றத் தொடரில் வார்ன் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மைக்கேல் கிளார்க் கேப்டன்சியில் ஆஷஸை ஆஸ்திரேலியா 5-0 என்று வென்ற தொடருடன் ஓய்வு அறிவித்தார் ஷேன் வார்ன். 2005 ஆஷஸ் தோல்விக்கு பழிவாங்கும் தொடராக அது அமைந்ததோடு ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியே மாறிப்போகச் செய்த வெற்றியாகும் அது.
அவரது வேதனை இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒருமுறைதான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது என்பது. இந்திய அணியை தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பது அவரைக் கடைசி வரை அதிருப்தியிலேயே வைத்திருந்தது. சச்சின் டெண்டுல்கரை உலகின் தலை சிறந்த டெஸ்ட் வீரர் என்றார். சச்சின் தன் பந்துகளை மேலே ஏறி வந்து அடிப்பது திரும்பத் திரும்ப தன் கனவுகளில் வந்து அச்சுறுத்துகிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
ஐபிஎல் 2008 தொடரை தன் கேப்டன்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கோப்பையை வென்றார் ஷேன் வார்ன். பிறகு கிரிக்கெட் வர்ணனையில் அதியற்புதமான கிரிக்கெட் நுணுக்கங்களை எல்லாம் நம்மிடையே பகிர்ந்து கொண்டிருந்தார். 2022 மார்ச்சில் தாய்லாந்தில் விடுப்புக்காகச் சென்ற போது மாரடைப்பினால் அகால மரணமடைந்து நம்மையெல்லாம் பெரும் வேதனையில் ஆழ்த்தி விட்டுச் சென்று விட்டார். கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத ஒரு ஆளுமை, ஜீனியஸ், கிரிக்கெட் மூளை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கேரக்டராக ஷேன் வார்னை மறக்க முடியாது.