தேவகோட்டை: கண்ணங்குடி அரசு பள்ளியை கல்வி மட்டுமின்றி அனைத்திலும் சிறந்த பள்ளியாக மாற்றிய தலைமை ஆசிரியருக்கு விருதுகள் குவிகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு கண்ணங்குடி, தேவண்டதாவு, காட்டுக்குடி புதூர், வளையன்வயல், ஆரக்கோட்டை, புதுவயல், கண்டியூர், விசும்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில் 2018-ம் ஆண்டு 150-க்கும் குறைவான மாணவர்களே இருந்தனர். சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர், மின்சாரம், ஆய்வகம், நூலகம் போன்ற எந்த வசதியும் இல்லை.
அந்த சமயத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மு.பாக்கியம் பொறுப்பேற்றார். அவர் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தியதோடு, கல்வி கற்பித்தல் முறையையும் மேம்படுத்தினார். தகவல் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆய்வக வசதி, நூலகம், சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை அமைத்தார்.
பள்ளி வளாகம் முழுமையும் மரக்கன்றுகள் நட்டு, பசுமையாக மாற்றினார். அதோடு அரசு நலத்திட்டங்கள், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்களின் உதவியோடு மாணவர் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரித்துள்ளார்.
உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. தற்போது நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை மூலம் அதனை 100 சதவீதமாக மாற்றியுள்ளார். கடந்த 2023-24-ம் கல்வியாண்டில் பசுமைப் பள்ளிக்காக ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டது. அதில் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்தல், நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சிறந்த பள்ளியாக மாற்றிய தலைமை ஆசிரியருக்கு கடந்த ஜூலையில் சிறந்த தலைமை ஆசிரியருக்கான அண்ணா தலைமைத்துவ விருது கிடைத்தது. கடந்த வாரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்தது. அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் அவருக்கு தொடர்ந்து விருதுகள் குவிகின்றன.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மு.பாக்கியம் கூறியதாவது: இந்த பள்ளியை கல்வியில் மட்டுமின்றி கலை, அறிவியல், சமூக சுற்றுச்சூழல் மேம்பாடு என அனைத்திலும் முதன்மைப் பள்ளியாக மாற்ற முடிவு செய்தேன். அதன்படி, அனைவரது ஒத்துழைப்போடு மாற்றிக் காட்டினோம்.
மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க உதவி தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையிலும் பள்ளி இயங்கியது. அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்திலேயே உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி அடைந்து வருகிறோம். கடந்த கல்வியாண்டில் 60 சதவீத மாணவர்கள் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றனர். கலைத் திருவிழா, இலக்கிய மன்ற போட்டிகளில் மாவட்ட அளவில் முத்திரை பதிக்கிறோம். இதில் கடந்த கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 9-ம் வகுப்பு மாணவி செ.எப்சிபா வெளிநாடு கல்விச் சுற்றுலா சென்றார்.
கடந்த 2023-24 கல்வியாண்டில் அறிவியல் கண்காட்சியில் தென்னிந்திய அளவிலான போட்டியில் மாணவர் சாத்தையா பங்கேற்றார். அனைத்து வகுப்பறைகளிலும் 3 மின்விசிறிகள், 6 மின்விளக்குகள் பொருத்தியுள்ளோம். ரூ.9.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தி நூலகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தூண்டுகோலாக உள்ளது.
பள்ளியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை மாதம் ஒருமுறை மறுசுழற்சி பயன்பாட்டுக்கு அனுப்ப கண்ணங்குடி ஒன்றியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த கல்வியாண்டு முதல் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஐ.சி.டி. தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.