சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் தேடி, தேடி கைது செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளதைக் கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து 13 நாட்கள் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து செப்.4-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் திடீரென ஒன்று கூடிய 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் நடவடிக்கைகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில் கடந்த 8-ம் தேதி 13 தூய்மைப் பணியாளர்கள் தங்களது வீட்டருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், 9-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பின்பு (மாநகராட்சி அருகே) அதே 13 பேர் மீண்டும் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து 10-ம் தேதி மெரினா உழைப்பாளர் சிலை முன்பும், 11-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை முன்பும் அதே 13 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ள 10 பேர் தொடர்ந்து 5-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் அருகே இருக்கும் மணியம்மையார் சிலைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “கடந்த 2 மாதங்களாக வேலையின்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. நாங்கள் செய்து வந்த வேலையை தானே கேட்கிறோம். எங்களது உரிமையை கேட்டுத்தானே போராடுகிறோம். இதற்காக தொடர்ந்து 5 நாட்களாக தண்ணீரைத் தவிர வேறு ஏதும் சாப்பிடாமல் போராடி வருகிறோம். எங்களில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதெல்லாம் ஏன் முதல்வரின் காதுகளில் விழவில்லை. வேலை கிடைக்கும் வரை, எங்களது உயிர் போகும் வரை போராடுவோம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். பின்னர் போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியபோது, அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீஸார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இவ்வாறு தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்துவதும், அவர்களை போலீஸார் தேடி, தேடி கைது செய்வதும், மாலையில் அவர்களை விடுவிப்பதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.