ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.13) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், அசாம் மற்றும் மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலிட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “இன்று முதல் இந்திய ரயில்வே வரைபடத்தில் ஐஸ்வாலும் இடம்பெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வாலுக்கான ரயில் பாதைக்கான அடிக்கலிடும் பணியை நான் தொடங்கி வைத்தேன். இன்று அந்த பணி முடிக்கப்பட்டு தேசத்துக்காக அர்ப்பணித்து வைத்துள்ளோம். பல சவால்களை கடந்து பைரபி – சாய்ரங் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது நமது பொறியாளர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பணியும் குறிப்பிடத்தக்கது.
நாம் எல்லோரும் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். இப்போது மிசோரத்தின் சாய்ரங் நேரடியாக டெல்லியோடு ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது வெறும் ரயில் பாதை இணைப்பு மட்டுமல்ல; மாற்றத்துக்கான உயிர்நாடி. இது மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில், கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் இது வலு சேர்க்கும். சுற்றுலா மேம்படும்.
பல ஆண்டுகளாக நமது நாட்டில் உள்ள சில அரசியல் காட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. அவர்களது கவனம் எல்லாம் எங்கு அதிக வாக்குகள் மற்றும் சீட்டுகள் உள்ளது என்பதில் மட்டும்தான் இருக்கும். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. எங்களது அணுகுமுறையே வேறு.
கடந்த 11 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். இந்த பகுதியை இந்தியாவின் வளர்ச்சிக்கான எந்திரமாக அமைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ள பல இடங்கள் தேசத்தின் ரயில் பாதை வரடைப்பிடத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த பகுதியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்க தூதுவனாக நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. அது உள்நாடு, வெளிநாடு என்று இல்லை.
மிசோரம் திறன் படைத்த இளைஞர்களால் ஆசீர்வதிக்க பட்டுள்ளது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பு விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இது குடும்பங்களுக்கு பலன் தரும். நமது நாட்டின் பொருளாதாரம் 2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.8% என வளர்ச்சி பெற்றுள்ளது” என்றார்.
அடுத்ததாக பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்துக்கு இன்று பகல் பொழுது செல்கிறார். ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அங்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
பைரபி – சாய்ராங் ரயில் பாதை: வடகிழக்கு மாநிலங்களின் மாற்றத்துக்கு இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்தகைய திட்டங்களில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகரை இணைக்கும் பைரபி – சாய்ராங் புதிய பாதை ரயில் திட்டமும் ஒன்றாகும். மிசோரம் மாநிலம் மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனும் திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இங்கு கடந்த 2014-ம் ஆண்டு வரை அஸ்ஸாம் எல்லையில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள பைரபிக்கு மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலை மார்க்கத்தில் செல்ல பெரும் தொகை செலவிடும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து, ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.8,071 கோடியில் 51.38 கிமீ நீளத்தில் ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2008-ல் அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து, பிரதான பணிகள் 2014-ல் தொடங்கப்பட்டன. இந்த புதிய ரயில் பாதை, தலைநகர் ஐஸ்வாலை அஸ்ஸாமில் உள்ள சில்சாருடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
நாட்டின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கங்கள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குராங் ஆற்றின் மீது, 371 மீ நீளமும், 114 மீ உயரமும் கொண்ட நாட்டின் இரண்டாவது உயர்ந்த ரயில் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இது குதுப் மினாரை விட 42 மீ உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலமே உலகளவில் முதலாவது உயரமான பாலமாகும்.
இவ்வாறான கட்டுமானங்கள் மூலம் ரயில்வே பொறியியல் வரலாற்றில் சவால் நிறைந்த பணியாக மிசோரம் மாநில ரயில் பாதை மாறியுள்ளது. பைரபியில் தொடங்கி ஹார்டுகி, கவ்னபுய், முகல்காங், சாய்ரங் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.