சென்னை: பிரதமரின் மணிப்பூர் வருகையை ஒட்டி திமுக எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “2027-ல் மணிப்பூரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரதமருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் பயணம் தொடர்பான பிரதமர் மோடியின் பதிவை மேற்கோள் காட்டி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்பதை அவருக்கு நினைவூட்டுவதில் மனிதாபிமானம் தோற்றுவிட்டது. 2027 மணிப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் அதில் வெற்றி பெற்றுவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் நாளை, (செப்.13), மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மற்றும் இம்பாலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். மணிப்பூரின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நாங்கள் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம்.
மணிப்பூரில் பல்வேறு சாலைத் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மகளிர் விடுதிகள் மற்றும் பலவற்றிற்கு அடிக்கல் நாட்டப்படும். மந்திரிபுக்ரியில் உள்ள சிவில் செயலகம், ஐடி சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம் மற்றும் மந்திரிபுக்ரியில் உள்ள புதிய காவல் தலைமையகம் உள்ளிட்ட கட்டிடங்கள் திறக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.