ஹைதராபாத்: நகைகளை கொள்ளையடிக்க 2 வேலையாட்கள் தெலங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலையும் செய்தனர். ஹைதராபாத் போலீஸார் 5 குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத் கூகட்பல்லியில் உள்ள ஒரு கேட்டட் கம்யூனிட்டி (தொகுப்பு வீடுகள்) பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி ரேணு அகர்வால். பல ஆண்டுகளாக ஹைதராபாத்தில் இவர்கள் உருக்கு வணிகம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமான ஒரு மகளும், கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களது வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரோஷன் எனும் இளைஞர் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 11 நாட்களுக்கு முன்னர், தனக்கு உதவியாக அதே மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷா எனும் நண்பரையும் பணிக்கு சேர்த்தார் ரோஷன். இந்நிலையில், கடந்த புதன்கிழமை ராகேஷ் கடைக்கு சென்று விட்டார். மகனும் கல்லூரிக்கு சென்று விட்டார். வீட்டில் ரேணு அகர்வால் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது மாலை 5 மணியளவில், பணியாட்களான ரோஷன் மற்றும் வர்ஷா ஆகிய இருவரும், தனியாக இருந்த ரேணு அகர்வாலை கட்டி போட்டு, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். வீட்டில் நகைகள், ரொக்கப்பணம் போன்றவற்றை எங்கெங்கு வைத்துள்ளீர்கள் என்று கேட்டு கத்தியால் ரேணு அகர்வாலின் கை நரம்புகள், கால் நரம்புகளை வெட்டி சித்ரவதை செய்துள்ளனர்.
நகைகள், பணம் எல்லாம் வங்கி லாக்கரில் தான் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். அப்போது லாக்கரின் டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு அவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். கடைசியில், குக்கரை எடுத்து ரேணு அகர்வாலின் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதன்பிறகு, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர், ரேணு அகர்வால் அணிந்திருந்த தங்க செயின், கம்மல், வளையல், மோதிரம் போன்ற சுமார் 5 சவரன் நகைகளை கொள்ளை அடித்ததோடு, பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தையும் கொள்ளை அடித்தனர்.
இதனை தொடர்ந்து, ரத்த கறை படிந்த தங்களின் உடமைகளை அங்கேயே போட்டுவிட்டு, இருவரும் குளியல் அறையில் ரத்த கறை நீங்க குளித்து விட்டு, மாற்று உடை அணிந்து கொண்டு, தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு ரேணு அகர்வாலின் இருசக்கர வாகனத்திலேயே அங்கிருந்து தப்பி தலைமறைவாகி உள்ளனர்.
மாலை 7 மணியளவில் ரேணு அகர்வாலின் கணவர் ராகேஷ் கடையில் இருந்து வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். கதவுவெகு நேரமாக திறக்கப்பட வில்லை. இதனால் அங்குள்ள ஒரு பிளம்பரை அழைத்து, வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து, வீட்டுக்குள் சென்று கதவை திறக்க சொன்னார்.
அதன்படி செய்த பிளம்பர், வீட்டில் ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக கூறினார். உடனே கூகட்பல்லி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் பணியாளர்கள் இருவர்தான் இந்த கொலையை செய்தது என போலீஸார் தீர்மானித்தனர். இவர்களை பிடிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.