புதுடெல்லி: ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிஹார் காங்கிரஸ் கட்சி இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் பிரதமர் மோடியின் கனவில் அவரது மறைந்த தாயார் வந்து, பிரதமர் மோடியின் பிஹார் அரசியல் குறித்து விமர்சனம் செய்வது போல் உள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனாவாலா சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது: பிஹார் காங்கிரஸ் ஒரு அருவருப்பான வீடியோ மூலம் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது. இது, அக்கட்சியின் துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. பெண்களை அவமானப்படுத்துவது என்பது அக்கட்சியின் அடையாளமாக மாறிவிட்டது. நம்முடன் இல்லாதவர் பற்றி வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் வெட்கப்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.
அருவருப்பானது: பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் கூறுகையில், “அரசியலில் எவ்வளவு கீழ்த்தரமாக செல்ல முடியும் என்பதை ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் காட்டியுள்ளன. இது அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது. இதனை பிஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் அவர்கள் படு தோல்வியை சந்திப்பார்கள்” என்றார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ ஆகியோரும் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.