புதுடெல்லி: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “நேபாளத்தில் அமைதி திரும்புவதில், வளம், வளர்ச்சியை உறுதி செய்வதிலும் உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்த சூழலில் இளைஞர்கள் மற்றும் மக்களின் ஆதரவுடன் சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினர் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்ததால் நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பகிர்ந்த எக்ஸ் தளத்தில் பதிவில், “நேபாளத்தின் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுள்ள சுசீலா கார்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் உள்ள நமது சகோதர, சகோதரிகளின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்பார்ப்பு… – இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள சுசீலா கார்கி ஆட்சியில் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அரசியலமைப்பில் திருத்தம் செய்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே. இதன் மூலம் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.