சென்னை: கோவையில் நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சையான நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் கோவை காளபட்டியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் 11 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார்.
இது விவாதப்பொருளான நிலையில், அவர் வெளியிட்ட விளக்க அறிக்கை: எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனுக்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பி வருவதாக எனது கவனத்துக்கு வந்தது. கடந்த ஜூலை 12-ம் தேதி விவசாய நிலம் வாங்கியது உண்மைதான்.
அதை எனது மற்றும் என் மனைவியின் சேமிப்பு, கடன் ஆகியவற்றில் இருந்து வாங்கினேன். கடந்த இரண்டு மாதங்களாக என் வங்கிக் கணக்கு மூலம், அந்த கடனுக்கான மாதாந்திர வட்டியை செலுத்தி வருகிறேன். மனைவி அகிலாவுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்ததால் பத்திரப்பதிவுக்கு நான் செல்லவில்லை.
பத்திரப் பதிவு, முத்திரைத் தாள், இதர கட்டணமாக ரூ.40 லட்சத்து 59,220 செலுத்தி உள்ளேன். மத்திய அரசின் பிஎம்இஜிபி திட்டத்தின்கீழ், பால்பண்ணை அமைப்பதற்கான கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதுவரை நான் வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான். விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் முதல்கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். எனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இதுபோன்ற சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறேன்.
இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்துக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதைவிட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.