புதுடெல்லி: வலதுசாரி தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டுவதாக உளவுத் துறைக்கு வந்த தகவலையடுத்து டெல்லி, ம.பி., ஜார்க்கண்ட் மற்றும் தெலங்கானாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் மும்பையை சேர்ந்த அஃப்தாப், அபு சூபியான் ஆகிய இருவரை டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி ஆயுதங்களுடன் கைது செய்தனர். பிறகு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அஷார் டேனிஸ், ம.பி.யின் ராஜ்கர் நகரில் கம்ரான் குரேஷி, தெலங்கானாவில் ஹசைஃப் ஏமன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக டெல்லி போலீஸார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் தகவல் பரிமாற்றத்தை ஆய்வு செய்ததில் வலதுசாரி தலைவர்கள் சிலரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த தீவிரவாத குழுவில் சுமார் 40 உறுப்பினர்கள் உள்ளனர். எனினும் அவர்களில் 5 பேருக்கு மட்டுமே இந்த நடவடிக்கை பற்றி தெரியும்.
தீவிரவாத குழுவில் உள்ள சிலர் தற்கொலை ஜாக்கெட்டுகள், வெடிகுண்டு தயாரித்து வந்துள்ளனர். ராஞ்சியில் கைதான அஷார்டேனிஸ் முக்கிய தீவிரவாதி ஆவார். ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பு முடித்துள்ள இவர் ‘கஸ்வா’ என்ற ரகசிய பெயருடன் செயல்பட்டு வந்துள்ளார். மாணவர் என்ற போர்வையில் இந்த ஆண்டு ஜனவரியில் இவர் ராஞ்சி வந்துள்ளார். இவர் ஏற்கெனவே வெடிகுண்டு தயாரிக்கும்போது காயம் அடைந்துள்ளார்.
ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றவர். வெடிகுண்டு தயாரிப்பது, ஆயுதங்கள் கொள்முதல் செய்வது, அமைப்பின் பலத்தை அதிகரிப்பது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுப்படி இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். சமூக ஊடக தளங்கள் மூலம் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். இவ்வாறு டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.