ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை, கிட்டத்தட்ட ஆட்சி செய்த நடிகர்களுள் ஒருவர் எம்.ஆர்.ராதா. தனது தனித்துவமான நடிப்பாலும் பேச்சாலும் ரசிகர்களைக் கவர்ந்த அவர், வில்லன், குணசித்திரம் என பிசியாக, படங்களில் நடித்து வந்த நேரம் அது. அப்போது அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று ‘இந்திரா என் செல்வம்’. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த அசோகன் கதாநாயகனாக நடித்த படங்களில் ஒன்று இது.
ஒரு குழந்தையைச் சுற்றி நடக்கும் கதை. பிரசவத்தில் தாய் இறந்துவிட, இரக்கம் கொண்ட செவிலியர் ஒருவர் அந்தக் குழந்தையை வளர்க்கிறார். இதற்கிடையே அந்த செவிலியரின் வாழ்க்கையை ஒரு கொடூர மருத்துவர் சீரழிக்கிறார். இதனால் அவள் வேறொரு ஊருக்குச் செல்ல நேரிடுகிறது. குழந்தை, ஒரு பள்ளியில் தாய், தந்தை, யார் என தெரியாமல் அனாதையாக வளர்கிறது. செவிலியரின் காதலன் உதவியுடன் கொடூர மருத்துவரிடம் இருந்து தன்னையும் குழந்தையையும் செவிலியர் எப்படி மீட்கிறார் என்பது கதை.
எம்.ஆர்.ராதாவுடன் செவிலியராகப் பண்டரி பாய், காதலராக அசோகன் மற்றும் நாகேஷ், ஏ.கருணாநிதி, டி.கே.சம்பங்கி, ஏ.பி.எஸ்.மணி, ‘ஜெமினி’ சந்திரா, புஷ்பமாலா, சாரதாம்பாள், சூர்யபிரபா, ‘பேபி’ சுமங்கலா, மீனாகுமாரி என பலர் நடித்தனர். கொஞ்சம் அதிகமான ‘கண்ணீர் காவியம்’ தான் என்றாலும் நாகேஷ், ஏ.கருணாநிதியின் நகைச்சுவை அந்த சோகத்தைக் கொஞ்சம் குறைத்தது. இந்தப் படத்தை டங்கன் மணி, சி.பத்மநாபன் இணைந்து இயக்கினர். திரைக்கதை, வசனத்தை விருதை ராமசாமி எழுதினார். அசோகா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சவுண்டப்பனும், சி.சென்ன கேசவனும் தயாரித்தனர்.
சி.என்.பாண்டுரங்கன், ஹெச்.ஆர்.பத்மநாப சாஸ்திரி இசை அமைத்த இந்தப் படத்தில், ‘உல்லாச மங்கை இல்லாமல் போனால்’, ‘காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு?’, ‘இன்பம் கொண்டாடும் மாலை’, ‘கன்னி பருவம் அவள்’, ‘ஆடி ஆடி என்ன கண்டாய் நல்ல பாம்பே’, ‘தித்திக்கும் தமிழிலே’, ‘தெல்ல தெளிந்த தேன் அமுதே’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. இதில், ‘உல்லாச மங்கை இல்லாமல் போனால்’, ‘காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு? ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. பண்டரி பாயும் அசோகனும் காதலர்களாகப் பாடிய இரண்டு பாடல்களில் ஒன்று பொருத்தமற்றது என விமர்சிக்கப்பட்டது அப்போது.
ஏற்காடு, சேலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இது, 1962-ம் ஆண்டு செப்.13-ம் தேதி வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.