புதுடெல்லி: வங்கிகளை போலவே பி.எப்.பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பு, ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, வரும் தீபாவளிக்கு முன்பாக, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இபிஎப்ஓ நிறுவனம் 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அப்போது, வங்கி சேவைகளை போலவே பி.எப். சேவைகளையும் மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது. அதில் பி.எப். கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஏடிஎம் மூலம் பெறும் வசதி, அல்லது யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று வர்த்தக சங்கங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. அதன்படி, பி.எப் ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உயர்த்துவது குறித்து இபிஎப்ஓ.வின் சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்டீஸ் பரிசீலிக்க உள்ளது.
இதற்கிடையில், பி.எப். பணம் என்பது ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உள்ளது. அந்த பணத்தை ஏடிஎம் அல்லது யுபிஐ மூலம் எடுப்பதற்கு வர்த்தக சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், பி.எப். சேமிப்பின் அடிப்படை நோக்கமே சிதைந்துவிடும் என்று வர்த்தக சங்கத்தின் கூறிவருகின்றனர். தற்போது மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம், வீடு கட்டுவது போன்றவற்றுக்கு ரூ.5 லட்சம் வரை பி.எப்.பில் இருந்து பணத்தை எடுக்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.