மருந்தக குடோனில் வேலை பார்க்கும் மணிக்கு (ஜி.வி.பிரகாஷ்), மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் ரேகா (தேஜு அஸ்வினி) மீது காதல். மருந்து கொண்டு செல்லும் மணியின் வாகனம் ஒரு நாள் திருட்டுப் போகிறது. அதற்குள் முக்கியமான பொருள் இருப்பதாகச் சொல்லும் உரிமையாளர், ரேகாவை கடத்தி வைத்துக் கொண்டு, பொருளைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு அவரை மீட்குமாறு பிளாக்மெயில் செய்கிறார்.
இதற்கிடையே தொழிலதிபர் அசோக்கின் குழந்தை காணாமல் போகிறது. அவரிடம் ஒரு கும்பல், பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறது. அசோக்கின் மனைவியிடம் அவர் முன்னாள் காதலன், வேறு விதத்தில் பிளாக்மெயில் செய்கிறான். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக இதை செய்கிறார்கள்? குழந்தை மீட்கப்பட்டதா? என்பது கதை.
தனது முந்தைய படங்களைப் போலவே இதையும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். பதற்றத்தையும் படப்படப்பையும் ஏற்படுத்துகிற த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களுடனும் விறுவிறுப்புடனும் வந்திருக்கிறது இந்தப் படமும். தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதையின் ‘மூடு’க்கு பார்வையாளர்களைத் தயார்படுத்தி விடுகிறது, திரைக்கதை. தனது காதலியை மீட்க, வேறு வழியின்றி தவறு செய்ய துணியும் ஹீரோ, பணத்துக்காக முன்னாள் காதலியை மிரட்டும் வில்லன், குழந்தையை மீட்க கோடி ரூபாயைக் கொடுக்க தயாராகும் தொழிலதிபர், தொடர்ந்து ஒவ்வொருவரிடமாக மாட்டிக்கொண்டு முழிக்கும் குழந்தை என படத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.
இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில், சீட் நுனிக்கு இழுக்கும் தொடர் ட்விஸ்ட், லாஜிக் இல்லை என்றாலும் அடுத்தது என்ன? என்று எதிர்பார்க்க வைத்துவிடுகிறது. ஆனால், குழந்தைக்கு என்னாச்சு? என்கிற பதைபதைப்பை காட்சிகளில் இன்னும் அழுத்தமாகக் கடத்தி இருக்க வேண்டும்.
ஜி.வி.பிரகாஷ், தனது காதலியைக் காப்பாற்றத் தவிக்கும் தவிப்பு, அதற்காக ஒரு குற்றத்தைச் செய்யத் துணிவது என சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தாய்மை அடைந்துவிட்ட காதலியாக தேஜு அஸ்வினி தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். தொழிலதிபராக வரும் காந்த், குழந்தையை காணா மல் தவிப்பதும், ‘பிளாக்மெயில்’ செய்பவர்களை எதிர்கொள்ளும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார். முன்னாள் காதலனின் மிரட்டலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பிந்து மாதவி, போலீஸ் அதிகாரியாக வரும் ஷாஜி, நெகட்டிவ் கேரக்டரில் வரும் லிங்கா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லியின் காமெடி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
சாம் சிஎஸ் பின்னணி இசையும் கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் கதையை த்ரில்லர் தளத்துக்கு இழுத்துச் செல்ல உதவுகிறது. சான் லோகேஷின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. எமோஷனல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி யிருந்தால் இந்த பிளாக்மெயிலை இன்னும் ரசித்திருக்க முடியும்.