டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று (13-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 198 நாடுகளை சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 49 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 19 பேர் கொண்ட குழு இந்த தொடரில் பங்கேற்கிறது. இவர்களில் ஈட்டி எறிதல் நட்சத்திரமான நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற அவர், நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறார். 2023-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82மீ), செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் (86.67 மீ) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தனர்.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று வரும் 17-ம் தேதியும், இறுதிப் போட்டி 18-ம் தேதியும் நடைபெறுகிறது. இதில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 3-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இந்த வகையில் தற்போது நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளராக இருந்து வரும் செக் குடியரசின் ஜான் ஜெலெஸ்னி (1993, 1995), கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (2019, 2022) ஆகியோர் தொடர்ச்சியாக இரு முறை தங்கப் பதக்கம் வென்றிருந்தனர்.
19 பேர் கொண்ட இந்திய அணியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் நீரஜ் சோப்ராவுக்கு, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் சவால் அளிக்கக்கூடும். 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவை பின்னுக்கு தள்ளி அர்ஷத் நதீம் தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் முதல் முறையாக நதீமை எதிர்கொள்ள உள்ளார் நீரஜ் சோப்ரா. இதனால் இந்த தொடர் அவருக்கு பதிலடி கொடுக்க நீரஜ் சோப்ராவுக்கு சிறந்த வாய்ப்பாக அமையக்கூடும்.
இருப்பினும், 27 வயதான நீரஜ் சோப்ரா இம்முறை தங்கப் பதக்கம் வெல்வது எளிதானதாக இருக்காது என கருதப்படுகிறது. 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே மைதானத்தில்தான் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். ஆனால் இம்முறை அர்ஷத் நதீமுடன், டைமண்ட் லீக் சாம்பியனான ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், கென்யாவின் ஜூலியஸ் யேகோ, டிரினிடாட் மற்றும் டோபாகோவின் கெஷோர்ன் வால்காட், பிரேசிலின் லூயிஸ் டா சில்வா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
31 வயதான ஜூலியன் வெபர் இந்த சீசனில் 3 முறை 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச தொலைவு 91.51 மீட்டர் ஆகும். அதேவேளையில் நீரஜ் சோப்ரா இந்த சீசனில் ஒரே ஒரு முறை மட்டுமே 90 மீட்டரை எட்டியிருந்தார். 2 தொடர்களில் 85 மீட்டர் தொலைவை தாண்டவில்லை. 2 தொடர்களில் 85 மீட்டரை கடந்திருந்தார், ஒரு தொடரில் 86 மீட்டரை எட்டியிருந்தார். இந்த ஆண்டில் அவரது 2-வது அதிகபட்சமாக 88.16 மீட்டர் உள்ளது.
இந்த சீசனில் ஜூலியன் வெபரும், நீரஜ் சோப்ராவும் இணைந்து 4 தொடர்களில் பங்கேற்றனர். இதில் சோப்ரா ஒரு முறை முதலிடம் பிடித்தார். ஜூலியன் வெபர் 3 முறை வாகை சூடினார். நீரஜ் சோப்ராவுடன் சச்சின் யாதவ், யஷ்விர் சிங், ரோஹித் யாதவ் ஆகியோர் ஈட்டி எறிதலில் பங்கேற்கின்றனர்.
ஆடவர் ஈட்டி எறிதல் வீரர்களைத் தவிர, அன்னு ராணி (மகளிர் ஈட்டி எறிதல்), பருல் சவுத்ரி (மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), முரளி சங்கர் (ஆடவருக்கான நீளம் தாண்டுதல்), குல்வீர் சிங் (ஆடவருக்கான 5000 மீட்டர்), பிரவீன் சித்ரவேல் (ஆடவருக்கான மும்முறை தாண்டுதல்) ஆகி
யோரும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சாதனையாளரான அனிமேஷ் குஜூர், 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார். அதேவேளையில் ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த தேஜாஸ் ஷிர்ஸு முதன்முறையாக களமிறங்குகிறார்.
தொடக்க நாளான இன்று காலை நடைபெறும் ஆடவருக்கான 35 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவின் ராம் பாபு, சந்தீப் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். மகளிருக்கான நடைபந்தயத்தில் பிரியங்கா கோஸ்வாமி கலந்து கொள்கிறார். மாலை நடைபெறும் மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் பூஜா பங்கேற்கிறார்.