சென்னை/திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பின்னர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார்.
இந்நிலையில், சுற்றுப்பயணத்துக்கான இலச்சினையை தவெக நேற்று வெளியிட்டுள்ளது. மேலும், அண்ணா, எம்ஜிஆருக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படமும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பேருந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொண்டர்களுக்கு கடிதம்: இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நா வரேன்’’ என்கிற நமது பயணம் தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம். 13-ம் தேதி (இன்று) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, ‘மக்களிடம் செல்’ என்ற அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று ஒவ்வொரு மாவட்டத்துக் கும் வருகிறேன்’ என குறிப்பிட் டுள்ளார்.
பிரச்சாரத்துக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் விஜய், காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். எம்ஜிஆர் சிலை பகுதியில் காலை 10.35 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி பேசுகிறார். அதன்பின், அரியலூர் சென்று பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவிலும், பெரம்பலூர் வானொலித் திடலில் மாலை 6 மணியளவிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்பின் சாலை மார்க்கமாக சென்னை திரும்புகிறார்.