விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை மூளைக்கசிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு மண்டை ஓட்டை திறந்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயசிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வத்திராயிருப்பு செம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் பாலபிரசாத்(7). கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-வது முறையாக மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
அச்சிறுவனுக்கு மீண்டும் மீண்டும் மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளைக்கும், மூக்கின் எலும்பு பகுதிக்கும் இடையே துவாரம் இருப்பதும், அதன் வழியாக அடிக்கடி நோய் தொற்று ஏற்படுவதும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கணபதிவேல் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் அடைக்கப்பட்டது.
இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் முழு ஆரோக்கியத்தோடு உள்ளான். இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மருத்துவர் அரவிந்த் பாபு, சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மற்றும் சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
உறுப்பு தானத்தில் 3-ம் இடம்: இதற்கிடையே, உடல் உறுப்புதானத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மாநில அளவில் 3-வது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.