புதுடெல்லி: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டதாக நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த பிப்.17 அன்று சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது, என மறுப்பு தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைகோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு, சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. விஜயலட்சுமிக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருதரப்பிலும் சமரசமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இருதரப்பிலும் பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத் ஆஜராகி, இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றும், விஜயலட்சுமி குறித்தும் சீமான் ஏற்கெனவே அவதூறாகப் பேசியுள்ளார். இதில் மனமுடைந்த அவர் கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன்தான் பாலியல் உறவில் இருந்துள்ளனர் என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘இருவரும் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தெரியாது எனச்சொல்ல அவர்கள் ஒன்றும் சின்ன குழந்தைகள் அல்ல. இந்த விவகாரத்தில் இருந்து விடுபட்டு இருவரும் சுதந்திரமான, நிம்மதியான வாழ்க்கையை தொடர வேண்டும் என விரும்புகிறோம்.
எதிர்காலத்தில் விஜயலட்சுமிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்றும், விஜயலட்சுமி மீதான அவதூறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வது குறித்து யோசிப்போம். தவறும்பட்சத்தில் சீமான் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும்’’ எனக்கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் செப்.24 வரை நீட்டித்தும், சீமானுக்கு கெடு விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.