சென்னை: ‘அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள விசிக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுற்றுப் பயணம் செல்வதில் விசிகவுக்கு அவசரம் எதுவும் இல்லை. கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு, சுற்றுப் பயணம் செல்வது குறித்து முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விலகியதன் மூலம் அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை என்பது தெரிகிறது. அதிமுக மீது எந்த காழ்ப்பும் விசிகவுக்கு இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு இதை சொல்லவில்லை. அதிமுகவில் நிலவும் குழப்பத்துக்கு பாஜக தான் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்.
பிரச்சினைகளுக்கு பாஜக காரணம்: வி.கே.சசிகலா செயல்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்பட்டு நிற்கிறார். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி தனித்து இயங்குகிறார். அதிமுக தலைமைக்கு எதிராக பேசும் அளவுக்கு செங்கோட்டையன் உருவாக்கப்பட்டுள்ளார். இவை அனைத்துக்கும் பாஜக காரணம் என்பதே ஒரே பதில்.
பாஜகவின் தலையீடுகளால் தான் அதிமுக இந்த நிலையை எட்டியிருக்கிறது. இதை முன்னணி தலைவர்கள் புரிந்து கொண்டால் முன்னெச்சரிக்கையான சில முடிவுகளை எடுக்க முடியும். அதிமுகவை அவர்களால் காப்பாற்ற முடியும் என நம்புகிறேன்.
ஒரு திராவிட இயக்கத்தை பல வீனப்படுத்திவிட்டால் பாஜகவை தமிழகத்தில் வளர்க்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர். இந்தயுக்தி, சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு அதிமுக முன்னணி தலைவர்கள் செயல்படுவது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வில், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.