சென்னை: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையினால் அங்கு சுற்றுலா மற்றும் இதர காரணங்களுக்காக சென்று வெளியேற இயலாமல் சிக்கித் தவித்துவரும் தமிழர்களை மீட்டுவர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுடெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24×7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுடெல்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர். மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24×7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 011-24193300, கைபேசி எண்: 9289516712 (whatsApp), மின்அஞ்சல்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.