புதுடெல்லி: பட்டாசு மீதான தடை தேசிய தலைநகரான டெல்லிக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்? நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மாசு இல்லாத காற்றைப் பெற உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
பட்டாசு தொடர்பான வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “பட்டாசுகளை தடை செய்ய வேண்டுமானால், அது நாடு முழுவதும் செய்யப்பட வேண்டும். அதற்கேற்ப நாடு முழுமைக்குமான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். இந்தத் தொழிலை சார்ந்திருக்கும் ஏழைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பிற பகுதிகளிலும், நகரங்களிலும் வசிக்கும் மக்களுக்கு, டெல்லியை போன்ற அதே தடையை ஏன் வழங்கக் கூடாது? அதனால், பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால், நாடு முழுக்க தடை விதிக்க வேண்டும்.
கடந்த குளிர்காலத்தில் குரு புரப் தினத்தன்று நான் அமிர்தசரஸில் இருந்தேன். அமிர்தசரஸில் மாசுபாடு டெல்லியை விட மோசமாக இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுவத்துவதற்கான என்ன கொள்கையாக இருந்தாலும், அது இந்தியா முழுவதுக்குமானதாக இருக்க வேண்டும். டெல்லியில் உள்ள மக்கள் இந்த நாட்டின் உயரடுக்கு பாதுகாப்புள்ள குடிமக்கள் என்பதால், டெல்லிக்கு சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது. டெல்லி அரசு, பட்டாசுகளை முழுமையாக கட்டுப்படுத்தத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இவ்வழக்கில், காற்று மாசுபாடு குறித்து மத்தியஸ்தர் தரப்பில், “காற்று மாசுபாடு என்பது டெல்லிக்கு மட்டுமேயான ஒரு பிரச்சினை என்ற தவறான கருத்து உள்ளது. உண்மையில் தெருக்களில் இருப்பவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்” என்று எடுத்துரைக்கப்பட்டது.