புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செப். 12) பதவியேற்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அப்பதவிக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (67) அபார வெற்றி பெற்றார். இவர், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில் நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்க உள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ராஜினாமா: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் குஜராத் ஆளுநராக இருக்கும் ஆச்சார்ய தேவவிரத் கூடுதலாக மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்புகளை கவனிக்க உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பிறப்பித்தார்.