புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் விடுதியில் மதம் மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதில் விடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட பல்வேறு வகுப்பினர் என சுமார் 60 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் மதம் மாறுவதற்கு தூண்டப்பட்டு ஏமாற்றப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆல்வாரின் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மிஷினரியின் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு தினமும் அனுப்பாததால், அக்குழந்தைகள் விடுதியிலேயே அதிக நாட்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கான உணவு உட்பட அனைத்து செலவுகளையும் கிறிஸ்தவ மிஷனரிகள் செய்துள்ளனர். பின்னர் குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும் மதம் மாற்ற முயற்சித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆல்வார் காவல் கண்காணிப்பாளர் சுதிர் சவுத்ரி கூறுகையில், ‘‘மதம் மாற்றம் செய்வது கடந்த 15 ஆண்டுகளாக விடுதியில் நடந்து வருகிறது. மதம் மாற்றுவதற்கான சிறப்பு பயிற்சியை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் அளித்து வந்துள்ளது. சோஹன் சிங் மற்றும் அம்ரித் சிங் ஆகிய 2 போதகர்கள், விடுதியில் தங்க வைக்கப்படும் குழந்தைகளிடம் பைபிளைப் படிக்கக் கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோஹன் சிங், அம்ரித் சிங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்’’ என்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டாய மதம் மாற்ற தடை மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.