கோழிக்கோடு: கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று மாசுபட்ட தண்ணீரில் உள்ள அமீபா மூலம் பரவுகிறது. இத்தொற்றுக்கு மலப்புரம் மாவட்டத்தின் வந்தூரை சேர்ந்த 54 வயது பெண் திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாஜி (47) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் இந்நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மலப்புரம் மாவட்டம் செம்பிராவை சேர்ந்த ஷாஜி கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இத்தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் இத்தொற்றுக்கு தற்போது 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து மூளைக் காய்ச்சல் பதிவானதை தொடர்ந்து வடக்கு மாவட்டங்களில் உள்ள கிணறுகள் மற்றும் குளங்களில் குளோரின் கலப்பது உள்ளிட்ட துப்புரவுப் பணிகளை சுகாதார அதிகாரிகள் தொடங்கினர்.