சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவேற்காடு, வீரராகவ புரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களும், மற்ற நாட்களில் 200-க்கும் மேற்பட்டோரும் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனை ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், திருவேற்காடு நகராட்சி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள மேல்பாக்கம், கண்ணப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களும் எளிதாக வந்து மருத்துவம் பெற வாய்ப்பாக அமைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த 2022-ல் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் வீரராகவபுரத் தில் உள்ள நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் திடீரென இத்திட்டம் வீரராகவபுரத்தில் இருந்து புளியம்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டு, அங்கு புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இதனால் வீரராகவபுரத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மருத்துவமனை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு வீரராகவபுரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடம் மாற்றாமல் மக்கள் பயன்பெற தொடர்ந்து நடத்த வேண்டும்.