புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக விமானத்தில் இருந்த 200 பயணிகள் சுமார் 2 மணி நேரம் விமானத்திலேயே இருந்தனர். இதன்பிறகு அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம் மூலம் 200 பயணிகளும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரம் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “விமான நிறுவனம் எங்களிடம் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. விமானத்தில் 2 மணி நேரம், விமான நிலையத்தில் 4 மணி நேரம் பரிதவித்தோம்” என்று தெரிவித்தனர்.
ஏர் இந்தியா நிறுவன வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் எங்கள் நிறுவனத்தின் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது. எனவே சிறிய கோளாறு என்றாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்.
சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. எனவே மாற்று விமானத்தில் பயணிகளை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தோம்” என்று தெரிவித்தன.