டேராடூன்: வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தராகண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக கங்கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர் மழையால் உத்தராகண்ட் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வாராணசியில் இருந்து உத்தராகண்ட் தலைநகர் டேராடூனுக்கு விமானத்தில் சென்றார். அங்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோருடன் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மேலும் வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
வெள்ள பாதிப்புகளால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தேசிய, மாநில பேரிடர் படைகளை சேர்ந்த வீரர்களை அவர் பாராட்டினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். வீடுகளை இழந்தோருக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தராகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது.