சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் நேற்று பாரதியார் படத்துக்கு மரியாதை செலுத்தினர் தமிழக அரசு சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, காமராஜர் சாலையில் அவரது சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் உள்ள ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள,
அவரது சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு, அமைச்சர்கள்
மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும்
அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாரதியார் நினைவு தினத்தையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பாரதியாரின் கவிதைகள் எப்போதும் எளிய மக்களுக்காகவே இருக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று குழந்தைகளுக்கு தைரியம் ஊட்டிய பாரதியாரின் நினைவு தினத்தில் போற்றி வணங்குவோம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு,
ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை திருவல்லிகேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “தனது எழுத்துக்களால் தேசிய உணர்வை விதைத்து, சமூக சீர்திருத்தத்தை சுயமாக முன்னெடுத்து கவிதைகளால் வேற்றுமைகளை நீக்கியவர். தாய்மொழியும், தாய்நாடும் தனது உயிரெனக் கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பெருமைகளைப் போற்றி வணங்குகிறோம்“ என பதிவிட்டுள்ளார்.