புதுக்கோட்டை: கனிமவள துறைக்கான அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று இரவு நடைபெற்ற ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ எனும் தேமுதிகவின் பிரச்சார பயணத்தில் அவர் பேசியதாவது: தேமுதிக பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அறந்தாங்கியில் நீண்ட நேரமாக மின் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையெல்லாம் செய்வீர்கள் என்று தெரிந்ததால்தான், பிரச்சார வாகனத்திலேயே மின் விளக்கு, ஒலிபெருக்கி வசதியை ஏற்படுத்தி உள்ளோம். தேமுதிகவைப் பார்த்தாலே திமுகவுக்கு பயம் வருகிறது. கடைகோடி தொண்டன் உள்ள வரை கட்சியை யாரும் அசைக்க முடியாது. கனிம வளத்துறை அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கனிம வளக்கொள்ளை அதிகமாக நடக்கிறது.
மக்களுக்கு துரோகம் செய்பவர் கள் காணாமல் போவார்கள். தேமுதிக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அதன் பிறகு 50 கட்சிகள் கூட்டணி சேர்ந்து வந்தாலும் அசைக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கான திட்டங்கள் இருக்கும். வரும் தேர்தலில் தேமுதிகவுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபா கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.