வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சார்லிகிக், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சிக்கு ஆதரவாக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
கடந்த 10-ம் தேதி அமெரிக்காவின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிக் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சார்லி கிக்கின் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினேன். இடதுசாரி அரசியல் வன்முறை அதிகரித்து வருகின்றன.
இந்த வன்முறையால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். அமெரிக்க நீதிபதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.