புதுடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அறிவுறுத்தலின்படி இந்தியாவில் தீவிவராத தாக்குதல் நடத்தி சதி செய்த 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்து வெடிகுண்டு மூலப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சிலர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டுவதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் டெல்லி போலீஸ் சிறப்பு படையினர், கடந்த 6 மாதங்களாக தீவிர கண்
காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ஆஷர் டேனிஷ் என்பவர் இந்த சதி திட்டத்துக்கு தலைமை வகிப்பது கண்டறிப்பட்டது. இவருடன் சேர்ந்து மும்பையைச் சேர்ந்த அப்தப் மற்றும் சுபியன், தெலங்கானாவைச் சேர்ந்த முசாபா மற்றும் கம்ரான் ஆகியோர் சதி திட்டம் தீட்டுவதும் கண்டறிப்பட்டது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் இடையேயான தகவல் தொடர்புகள் அனைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே நடைபெற்றுள்ளன.
ராஞ்சியில் டேனிஷ் மறைவிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனங்கள் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சோடியம் பைகார்பனேட் உள்ளிட்ட ரசாயணப் பொருட்கள், பால்ரஸ், பியூஸ் கருவிகள், வயர்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் நாட்டில் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். ராஞ்சி, டெல்லி, முசாபா பகுதிகளில் தங்கியிருந்த இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களின் திட்டம் என்ன? நிதியுதவி அளிப்பது யார்? போன்றவை குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத கும்பல் கைது செய்யப்பட்டது மூலம் நாட்டில் நடைபெறவிருந்த மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.