புதுடெல்லி: சமூக மாற்றத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மோகன் பாகவத் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் 75-வது பிறந்தநாளை (செப்டம்பர் 11) முன்னிட்டு, பல்வேறு பத்திரிகைகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு சிறப்பு கட்டுரை எழுதியிருந்தார். அதில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்ற கொள்கைக்கு வாழும் உதாரணமாக விளங்குகிறார். சமூக மாற்றம், ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்த முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளார்.
இந்த ஆண்டு விஜயதசமி நாளில் (அக்டோபர் 2) ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா வருகிறது. அதே நாளில் மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த தினம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ்-க்கு மிகுந்த ஞானமும் கடின உழைப்பும் கொண்ட மோகன் பாகவத் தலைவராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துடன் நெருங்க வேண்டும் என்பதற்காக, அவருடைய 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அளவுக்கு மீறி புகழ்ந்துள்ளார்” என கூறியுள்ளார்.