சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கமல்ஹாசன் தலைமையில் மநீம கட்சியினர் செப்.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்துகின்றனர்.
கடந்த 2024 மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் மநீம இடம்பெற்றது. அப்போது, அக்கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதாக திமுக தெரிவித்தது. அந்தத் தேர்தலில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் சூறாவளி பிரச்சாரம் செய்தார். இது வேட்பாளர்களின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது.
சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றதை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் மநீம கட்சியினர் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் 4 நாட்களும் காலை, மாலை என இரு அமர்வில் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் 61 தொகுதிகளில் மநீமவுக்கு செல்வாக்கு இருப்பதால், இதில் ஏதேனும் சில தொகுதிகளில் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.