ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் முக்கிய கமாண்டர்கள் உட்பட 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 16 பேர் சரணடைந்தனர்.
வரும் 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சல் தீவிரவாதத்தை நாட்டில் இருந்து முற்றிலுமாக அகற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சரணடையும் நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கரியாபண்ட் மாவட்டத்தில் கோப்ரா கமாண்டோ சிறப்பு படை வீரர்கள், சிஆர்பிஎப், உள்ளூர் போலீஸார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கரியாண்ட் பகுதியில் மெயின்புர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சில மணி நேரம் நடந்த இந்த என்கவுன்ட்டரில் முக்கிய கமாண்டர்கள் உட்பட 10 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராய்ப்பூர் மண்டல போலீஸ் ஐ.ஜி. அம்ரேஷ் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.
16 நக்சல்கள் சரண்: நாராயண்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராபின்சன் குரியா நேற்று கூறியதாவது: நாராயண்பூரில் 16 நக்சல்கள் கடந்த 10-ம் தேதி மாலை சரணடைந்தனர். இவர்கள் ஜனாதனா சர்கார், சேத்னா மண்ட்லி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள். இந்த அமைப்புகளில் கீழ் நிலையில் பணிபுரிந்த இவர்கள், ஆயுதம் ஏந்திய நக்சல்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள், இதர அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளனர்.
மேலும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது, வெடிகுண்டுகளை வைப்பது, பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு குறித்த உளவு தகவலை திரட்டுவது உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சரணைடந்த நக்சல்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. மறுவாழ்வுக்கான மற்ற உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.