சென்னை: தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த நிகழ்வில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப் புணர்வு பிரச்சாரத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் 1.39 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய அளவில் எச்ஐவி பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 0.23 சதவீதம். தமிழகத்தில் கடந்த 2010-ல் 0.38 சதவீதமாக இருந்த எச்ஐவி பாதிப்பு தற்போது 0.16 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக, 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.
அதன்படி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன், ஈரோடு நந்தா, திருவள்ளுர் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆகிய 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தற்போது தொடங்கி வைக்கப்படுகிறது.
அந்த கல்லூரி நிர்வாகங்களுக்கு இதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, 11 கல்லூரிகளில் எச்ஐவி விழிப்புணர்வுக்கான செஞ்சுருள் சங்கம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 20 கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, 11 பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 30 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகள் என்பதற்கு பதிலாக, மருத்துவப் பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்தார். இதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, நகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி டீன்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.