திருப்பதி: நேபாளத்தில் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திராவை சேர்ந்த 144 சுற்றுலா பயணிகள், பத்திரமாக விமானம் மூலம் ஆந்திரா திரும்பினர். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.
நேபாளத்தில் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திர சுற்றுலாப் பயணிகள், தங்களை காப்பாற்றும்படி வாட்ஸ் அப் வீடியோ பதிவு மூலம் ஆந்திர மாநில கல்வி துறை அமைச்சர் லோகேஷிடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து, அவர், அமராவதி தலைமை செயலகத்திலேயே முகாமிட்டு, இதற்கென தனி அதிகாரிகளின் குழுவை உருவாக்கி, தகவல்களை சேகரித்தார்.
மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உட்பட சில மத்திய அமைச்சர்களின் உதவியை நாடினார். சுமார் 240 பேரை மீட்க தலைமை செயலகத்திலேயே தங்கி இருந்து நேற்று 2வது நாளாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் பின்னர், டெல்லியில் இருந்து தனி விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சென்றது. அங்கு தயாராக இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 144 பயணிகளை ஏற்றி கொண்டு விசாகப்பட்டினம் திரும்பியது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நேற்றிரவு 104 பேரும், திருப்பதி விமான நிலையத்தில் மீதமுள்ள 40 பேரும் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர். அவர்களை கண்ட உறவினர்கள், நண்பர்கள் ஆனந்தக் கண்ணீருடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.