தமிழக அரசு சாதிய படுகொலைக்கு எதிராக தனி சட்டத்தை உருவாக்கி நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார்.
சாதிய படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றக் கோரி பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலர் க.ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கே. ஜி.பாஸ்கரன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசியதாவது: சாதிய ஒடுக்குமுறை, சாதிய கவுரவம் என்ற பெயரில் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் கொடுமைகள் நடக்கின்றன.
தேசிய ஆவணக் காப்பகத்தில் சாதிய கவுரவத்தால் நடக்கும் குற்றங்கள் தொடர்பான எந்த எண்ணிக்கையும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மார்க்சிஸ்ட் கட்சிதான் சாதிய குற்றங்களுக்கு தனிச் சட்டம் வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதன்முதலில் குரல் கொடுத்தது.
கடந்த 11 ஆண்டுகளில் பாஜக ஆளும் 9 மாநிலங்களில் லவ் ஜிகாத் என்ற மோசமான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்து – முஸ்லிம் மதத்தினர் காதிலித்து திருமணம் செய்வதை தடுக்கவே லவ் ஜிகாத் சட்டத்தை பாஜக கொண்டு வந்தது.
அதேநேரத்தில் தாழ்த்ப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை மாற்று சமுகத்தை சேர்ந்தவர் காதலித்தால் அதனை தடுக்க சட்டத்தை தேசிய அளவில் ஏன் பாஜக கொண்டு வரவில்லை. சாதிய கட்டமைப்பு, சாதிய கொடுமைகள் தொடர வேண்டும் என பாஜக நினைக்கிறது.
நாடு தழுவிய அளவில் சாதிய கொடுமைக்கு எதிராக தனி சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு சாதிய படுகொலைக்கு எதிராக தனி சட்டத்தை உருவாக்கி நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும். இந்த நடவடிக்கைக்கு தோளோடு தோள் நிற்போம். என்று தெரிவித்தார்.
கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்திய குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர்கள் கன்னியாகுமரி ஆர்.செல்லசுவாமி, விருதுநகர் ஏ.குருசாமி, தூத்துக்குடி கே.பி. ஆறுமுகம், தென்காசி பி. உச்சி மாகாளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில குழு உறுப்பினர் பி.கற்பகம் நன்றி கூறினார்.