சென்னை: டெட் தேர்ச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரி யர்கள் அனைவரும் ‘டெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்தியது. ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளும் பெறப்பட்டன. அதன்படி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தள பதிவில், ‘டெட் தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்பட்டால், பெருமளவிலான ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு பெற வழிவகுக்கும், ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். தவிர, டெட் தேர்வை பின்னோக்கிப் பயன்படுத்துவது ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. எனவே, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.