ஓசூர்: ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடந்த நான்கரை ஆண்டுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை சார்பில், முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து, ரூ.250 கோடி முதலீட்டில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 3 நிறைவடைந்த திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.1,210 கோடி முதலீட்டில் 7,900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜெர்மனி, இங்கிலாந்து பயணம்மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் தமிழகம் திரும்பினேன். அடுத்த 3 நாட்களில் ஓசூரில் தற்போது நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24,307 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நமது சாதனையை நாம்தான் முறியடிக்கிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீத ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொழில் முன்னேற்றம், வளர்ச்சியை ஓசூர் பார்த்து வருகிறது. இதனால் ஓசூரை நோக்கி தொழிற்சாலைகள் சாரை சாரையாக வருகின்றன. இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலைநகராகவும் ஓசூர்தான் இருக்கிறது.
முதலீட்டாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க காத்திருக்கிறோம். தமிழகத்துடன் இணைந்து பயணம் செய்தால் வெற்றி நிச்சயம். எனவே, உங்கள் முதலீடுகளை எப்போதும் தமிழகத்தில் மேற்கொள்ளுங்கள்.
குறு சிறு நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம் அக்டோபர் 9, 10-ம் தேதிகளில் கோயம்புத்தூரில் உலக புத்தொழில் மாநாட்டை நடத்துகிறது. உலகம் முழுவதும் இருந்து தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், புத்தொழில் முனைவோரை ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இந்த மாநாடு அமையும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து, விஸ்வநாதபுரம் எல்காட் தொழிற்பூங்காவில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை சார்பில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனம் ரூ.1,100 கோடி முதலீட்டில் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
மாநாட்டில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, ஆட்சியர் தினேஷ் குமார், எம்.பி. கோபிநாத், குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2 விரிவாக்கத் திட்டங்கள்: கிருஷ்ணகிரி அருகே குருபரபள்ளி தொழிற்பூங்காவில் உள்ள டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரூ.450 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 2 புதிய விரிவாக்க திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி வரிசையை தொடங்கி வைத்தார்.
டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் தலைவர் பிங்க் செங், தாய்லாந்து தலைவர் ஜேம்ஸ், தைவான் துணைத் தலைவர் மார்க்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.