சென்னை: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சாட்சி விசாரணைக்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர். திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதால், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி திமுக தரப்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாஸ்டர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கௌதம், கால அவகாசம் கேட்டுக்கொண்டதையடுத்து, மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணையை அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.