தென்காசி மாவட்டத்தில் தக்காளிப் பழம் கிலோ ரூ.2 முதல் 6 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது. ஆலங்குளம், கீழப்பாவூர், சுரண்டை, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, அகரக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தனர்.
இந்நிலையில், சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தக்காளிப் பழம் விலை படிப்படியாக படிப்படியாக குறையத் தொடங்கியது. பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை சந்தையில் ஒரு கிலோ தக்காளிப்பழம் ரூ.2 முதல் 6 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சில இடங்களில் தக்காளிப் பழங்களை பறித்து, வயலிலேயே கொட்டியுள்ளனர். சில விவசாயிகள் தக்காளி பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல், மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற எந்த பராமிப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் அப்படியே பராமரிப்பின்றி விட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “தக்காளிப் பழம் விலை வீழ்ச்சியால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளிப் பழங்களை பறித்து சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி, சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். இதற்கான ஆள் கூலி, வாகன வாடகை, சந்தையில் கமிஷன் போக வருமானம் எதுவும் இருக்காது. இந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்வதற்காக பயிர்களை பராமரிக்க மருந்து தெளித்தல், உரமிடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளை செய்ய செலவு செய்தால் நஷ்டம் அதிகமாகும். இதனால் கடந்த சில நாட்களாக பயிர்களை பராமரிக்காமல் விட்டுவிட்டோம். தக்காளிப் பழங்கள் செடியிலேயே பழுத்து வீணாகின்றன.
கிலோ ரூ.40 வரை விற்பனையானபோது சில விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விலை வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. தற்போது 2 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளும் விலை வீழ்ச்சியால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் பரவலாக தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாக தக்காளி வரத்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது” என்றனர்.