அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.11) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிஐடியு தொழிற்சங்கம் நீண்ட காலமாக போராட்டத்தில் உள்ளது. அவர்களை அழைத்துப் பேசி உள்ளோம். தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில் 3 ஆண்டுகளில் 2 முறை ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்து உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் 1 ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முடிப்பதற்கு 30-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சி முடியும் நேரத்தில் முடிக்காமல் விட்டுச் சென்றனர்.
திமுக ஆட்சியில் ஒருமுறை 5 சதவீதம் ஊதிய உயர்வும், அடுத்த முறை 6 சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பண பலன்களை வழங்க ரூ.1,100 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான நிதியை வழங்கவும், நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் புதிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டுச் சென்றனர். தற்போது அவற்றை நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் புதிய பேருந்துகளை வாங்காமல் அதிமுக அரசு சென்றது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 4,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பொதுமக்களின் பாராட்டைப்பெறும் துறையாக, போக்குவரத்து துறை மாறியிருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை சேவை ஆற்றுவதை அனைவருமே பாராட்டுகின்றனர். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் சிஐடியு தொழிற் சங்கத்தினர், தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.
அதிமுக – பாஜக நாடகத்தின் உச்சகட்ட காட்சிகள் நடக்கின்றன. அந்த பொம்மலாட்டத்தின் முடிவை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு இருந்தது. அப்பொழுது செய்யாததை எல்லாம் இப்பொழுது செய்வதாக சொல்வது கண்துடைப்பு நாடகம். கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. கொடுக்காத வாக்குறுதிகளான புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தந்துள்ளோம்.
அதற்கும், இதற்குமான வித்தியாசத்தை தமிழக மக்கள் புரிந்து, எடப்பாடி பழனிசாமியின் பொய் பிதற்றல்களை புறக்கணிப்பார்கள். எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன, எவை நிறைவேற்றப்படவில்லை, என்பது குறித்து நிதி அமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் நாங்கள் பொதுமக்களுக்கு பேட்டி மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நிறைவேற்றப்பட வேண்டியவைகளில் முக்கியமாக இருக்கும் திட்டங்கள், மத்திய அரசின் அனுமதி தர வேண்டியவை. குறிப்பாக அவர்களது அதிகார வரம்பிற்கு உட்பட்டவை அவை. சில வாக்குறுதிகள் வேறு வகையில் மேம்படுத்தப்பட்ட வாக்குறுதிகளாக உள்ளது. எஞ்சி இருப்பவற்றை இடைப்பட்ட காலங்களில் நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிஹார் மாநில தேர்தல் வருகின்ற காரணத்தினால் அம்மாநிலம் மீது பாஜகவுக்கு பாசம் வந்துள்ளது. அங்கு கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் அரசை ஏறி மிதித்து பாஜக மேலே வர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, சாலை,ரயில் போக்குவரத்துக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. பாஜகவின் ஒவ்வொரு நாடகத்தையும் பிஹார் மாநில மக்கள் பார்த்து கொண்டு வருகின்றனர்.
அந்த நாடகங்களை அவர்கள் ஏற்கவில்லை என்பதால் தான், வாக்குத்திருட்டு எதிர்ப்பு தீவிரமாகியுள்ளது. இவ்வளவு வெளிப்படையாக வாக்குத்திருட்டை மக்கள் பார்த்தும், உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்ட பின்னரும் பிஹாரில் 65 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்கி பாஜக ஆட்சியைப் பிடிக்கும் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அங்கு மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டதை ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் வந்ததை நாடு பார்த்தது. பிஹார் மக்கள் பாஜக என்ன செய்தாலும் அதற்கு பதிலடி தருவார்கள் என்றார்.