கோவை: கோவை அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு நடக்க முடியாத நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டு, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட இடங்களுக்கு சக்கர நாற்காலி (வீல்சேர்) மூலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் அழைத்து செல்வார்கள்.
நோயாளிகளை முறையாக சக்கர நாற்காலிகளில் ஏற்றி செல்கிறார்களா என்பதை மேற்பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல்(84) என்பவர், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
அவரது வலது காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில், மகன் காளிதாஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 3-வது தளத்தில் செயல்படும் நரம்பு அடைப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.
வடிவேலை பரிசோதித்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட கால் பாதம் பகுதியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர், தரை தளத்துக்கு வருவதற்காக சக்கர நாற்காலியை எடுத்து வரும் ஊழியரை அழைத்துள்ளனர். அதற்கு அவர் ரூ.100 தர வேண்டும் என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் 2 மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் சக்கர நாற்காலி வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் தந்தையை லிப்டில் தரைத்தளத்துக்கு அழைத்து வந்து, வெளியே வந்தவுடன் தனது தோளில் தூக்கிக்கொண்டும், தரதரவென இழுத்துக்கொண்டும் வந்தார். பின்னர் தந்தையை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதவிர சக்கர நாற்காலியில் சாப்பாட்டு கேரியர்களை எடுத்து செல்லும் வீடியோவும், மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலி இன்றி தவித்த வீடியோவும் வெளியாகின. அலட்சியமாக நடந்து கொண்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து, சக்கர நாற்காலி வழங்காததை கண்காணிக்காத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகியோரை 5 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி நேற்று உத்தரவிட்டார். டீன் கீதாஞ்சலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கூடுதலாக சக்கர நாற்காலிகள் வாங்குவதற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல பணம் கேட்டது தொடர்பாக விசாரணை மேற்கோள்ளப்படும்’’ என்றார்.கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்காததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சிரமத்துடன் தூக்கிச் சென்ற காளிதாஸ்.