திருச்சி: பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது தவறு தான் என்றும், இனி இதுபோன்ற தவறு நிகழ அனுமதிக்க மாட்டேன் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமிழக முதல்வரை ஒருமையில் பேசியது வருத்தத்துக்குரியது. யாராக இருந்தாலும் அரசியலில் நாகரிகம் தேவை. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை இன்னும் துணை முதல்வர் உதயநிதி தொடங்கவே இல்லை.
அதற்குள் அவர் எது கூறினாலும், எதிர்க்கட்சியினர் விவாதப்பொருளாக்கி பதில் கொடுக்கின்றனர். அந்தவகையில், துணை முதல்வர் உதயநிதி எதிர்க்கட்சியினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். உப்பிலியபுரம் அருகே அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றதாக எனக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, மாவட்டக் கல்வி அலுவலர் தன்னிச்சையாக விழா நடத்த இடம் கொடுத்தது தெரியவந்தது. பள்ளியில் ஏற்கெனவே பாடம் நடத்த போதிய நாட்கள் இல்லாத நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தியது மிக மிக தவறு. இனி இதுபோன்ற தவறு நிகழ அனுமதிக்க மாட்டேன் என்றார்.