புதுடெல்லி: கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 1,000 கிலோ தங்கம் சீன எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.800 கோடியாகும். சீன எல்லை வழியாக இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் சீனர்கள், திபெத்தியர்களுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய – சீனா இடையே 3,488 கி.மீ. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இந்தோ – திபெத் எல்லைப் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் லடாக் பகுதியில் இந்தோ – திபெத் எல்லைப் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 108 கிலோ வெளிநாட்டு தங்கம் எல்லை வழியாக கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியின் என்சிஆர் பகுதியில் 5 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. லடாக்கில் ஒரு இடத்தில் சோதனை நடந்தது.
இந்த விவகாரத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் விசாரணையில், சீன எல்லை வழியாக இதுபோல் 1,064 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதும், அதற்கான பணம் கிரிப்டோகரன்சி மூலம் செலுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவை சேர்ந்த பு சும் சும் என்பவர் பெயரில் இருந்து இந்தியாவில் உள்ள டெண்டு தஷி என்பவர் பெயருக்கு எல்லை வழியாக வெளிநாட்டு தங்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கடத்தலில் டெண்டு தஷி மூளையாக செயல்பட்டுள்ளார். அதேபோல் சீனாவில் இருந்து திபெத்தை சேர்ந்த டென்சின் கந்தாப் என்பவர் சட்டவிரோத கடத்தல் தங்கத்தை பெற்றுள்ளார். அதை இந்தியாவில் உள்ள கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
டெண்டு தஷி கடத்திக் கொண்டு வந்த தங்கத்தை டெல்லியில் உள்ள தனி நபர்கள் பலர் பெற்று, அவற்றை தங்க நகைக் கடைகள், டீலர்களுக்கு விற்றுள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு அமலாக்கத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.