பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் அருகேயுள்ள வனப்பகுதியில் புலியை பிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, வனத்துறையினர் 7 பேரை கூண்டில் அடைத்து கிராம மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் தேசிய வனவிலங்கு காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 6 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை புலி, சிறுத்தைகள் பிடித்து தின்றதால் கோபம் அடைந்தனர். அதேவேளையில் புலிகளை பிடிக்காமல் வனத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 2 மாடுகளை புலி தின்றதால் கிராம மக்கள் நஷ்ட ஈடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் புலிகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினர். இதனிடையே குண்டுலுபேட்டையை அடுத்துள்ள பொம்மலபுராவில் புலியை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் 7 பேர் தாமதமாக வந்தனர். அதற்குள் புலி காட்டுக்குள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது விவசாய சங்கத் தலைவர் ஹொன்னூரு பிரகாஷ் தலைமையிலான கிராம மக்கள், வனத்துறை ஊழியர்களிடம், ‘‘தாமதமாக வந்தது ஏன்?’’ என கேள்வி எழுப்பினர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிராம மக்கள் புலியை பிடிக்காத வனத் துறையினர் 7 பேரையும் பிடித்து கூண்டில் அடைத்து, முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து குண்டுலுபேட்டை வட்டாட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேசி, சமாதானம் செய்தனர். மேலும், புலியை விரைந்து சிறை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் கிராம மக்கள் வனத்துறை ஊழியர்கள் 7 பேரையும் கூண்டை திறந்து விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.