சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தற்போது வரை 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய 17 நிலையங்களில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
முதல்கட்டமாக சூலூர்பேட்டை, பரங்கிமலை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது, சென்னை ரயில்வே கோட்டத்தில், 15 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.14.7 கோடியில் மேம்பாட்டுப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. புதிய நிர்வாகக் கட்டிடம், மக்கள் கூடும் பகுதி மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்களுக்கான கட்டுமானப் பணி ஆகியவை இறுதிக் கட்டத்தில் உள்ளன.
நிலைய முகப்பு மற்றும் பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. 5, 6-வது நடைமேடையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 7, 8-வது நடைமேடையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. நடைமேடைகளில் மேற்கூரைகள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளன. 2-வது நடைமேடை, 7 மற்றும் 8-வது நடைமேடை அருகே இரண்டு மின்தூக்கிகள் நிறுவப்பட்டுள்ளன. 3 மற்றும் 4-வது நடைமேடை, 5 மற்றும் 6-வது நடைமேடையில் கூடுதல் மின்தூக்கிகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
பாதசாரிகள் நடைபாதை, பயணிகள் தகவல் அறியும் பலகைகள் ஆகியவற்றின் இறுதிக் கட்டப்பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, நவீன வடிவமைப்புடன் புதிய மாடி மற்றும் தரை நிலை கட்டிடம், விசாலமான மக்கள் கூடும் பகுதி, ஏசி வசதி கொண்ட காத்திருப்போர் அறைகள், ஓய்வறைகள் மற்றும் விஐபி ஓய்வறைகள், விரிவாக்கப்பட்ட பார்க்கிங் வசதி உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.