சென்னை: புழுதிவாக்கத்தில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி, 14வது மண்டலம், 186-வது வார்டு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இதில், பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், பஜனை கோயில் தெருவில் மட்டும் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. ஏற்கனவே பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த புழுதிவாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் இந்த பிரதான சாலையில், மில்லிங்பணி தொடங்கி சாலை பணி முழுமையாக முடிக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சாலை முற்றிலும் பயன்பாடற்ற நிலைக்கு மாறிவிட்டது. சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் படு மோசமான நிலையில் சாலை உள்ளது. வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள மேடு, பள்ளம் தெரியாமல், விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். சென்னை மாநகராட்சி இந்த சாலையை சரிசெய்யாமல் இருப்பது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், “குடிநீர் வாரியம் – சென்னை மாநகராட்சி இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்த சாலை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு முன் குடிநீர் பணிகளை வாரியம் முடித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களின் கால தாமதத்தால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த வார்டு மாமன்ற உறுப்பினரும் இந்த மோசமான சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் படும் அவதியை கண்டு கொள்வதில்லை. இந்த சாலையில் உயிரை கையில் பிடித்து கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்கிறோம். சென்னை மாநகராட்சி ஆணையர் இதில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்” என்றனர்.
இது குறித்து, 14வது மண்டல உதவி பொறியாளர் கூறியது: பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சாலை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்து குடிநீர் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து இருந்தோம். முதல் கட்டமாக மில்லிங் பணியை மேற்கொண்டோம். அந்த வகையில் தான் பஜனை கோயில் தெருவிலும் மில்லிங் செய்யப்பட்டது. மில்லிங் செய்யப்பட்ட பிறகு வாரிய அதிகாரிகள் குடிநீர் பைப் லைன் புதியதாக போடப்படவேண்டுமென கூறி, அதற்கு உண்டான கட்டணம் ரூ. 98 லட்சமும் செலுத்திவிட்டனர்.
வாரியம் கேட்டுக் கொண்டதால், நாங்கள் சாலை அமைக்கவில்லை. ஓரிரு தினங்களில் பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கிறோம். முடிந்தவுடன் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார். இதே கருத்தை மாமன்ற உறுப்பினர் ஜெ. கே மணிகண்டனும் தெரிவித்தார்.